Sunday, February 28, 2021

மார்ச்சு 01, 2021-ஷாகீத் அப்ரிடி பிறந்த தினம் இன்று!

தேசம் கடந்த காதல்-மார்ச்சு 01, 2021-ஷாகீத் அப்ரிடி பிறந்த தினம் இன்று.

 (முன் குறிப்பு : இந்த கட்டுரைரையை முழுமையாக Type செய்ய 2 மணி நேரத்திற்கும் மேலாக ஆனது. மனம் கவர்ந்த ஷாகீத் அபிரிடிக்காக இந்த மணித்துளிகள் சமர்ப்பணம்)

 

பள்ளிக்கு போகிறேன் என வீட்டில் இருந்து கெளம்பி, பள்ளிக்கு போகாமல், பள்ளி வகுப்பை Cut அடித்து விட்டு, விளையாட போவது நம்ம ஊர் மட்டுமில்ல. உலகம் முழுவதும் இருக்கும் இருக்கும் யதார்த்தம் தான். அப்படி தான் இவனும் பள்ளிக்கு போறேன் என கெளம்பி, விளையாட மைதானத்திற்கு சென்று விடுவான். 

 

மாலை வீட்டுக்கு போகும் போது, பள்ளிக்குத்தான் போனேன் என பொய் சொல்லுவான். வீட்டில் இருப்பவர்களும் நம்ப தான் செய்தார்கள். இப்படியே பள்ளியை கட் அடித்து விட்டு தெனமும் புத்தக பையுடன் மைதானத்திற்கு செல்வான், மைதானத்தில் பையை கேலரியில் வைத்து விட்டு, தனது கையை மட்டும் கொண்டு செல்வான். அந்த கை தான் பின்னாளில் இவனது வாழ்க்கையை மாற்றியது. ஆம் அந்த சேட்டைக்கார சிறுவன் தான் பின்னாளில் உலகமே வியந்த ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரிடி. இன்னும் சொல்லப்போனால், நம்ம ஊரு சச்சின் போல...

ஆம், பாகிஸ்தான் நாட்டில் உள்ள, கைபேர் என்ற இடத்தில் 1975 மார்ச்சு 1ஆம் தேதி ஷாகித் அப்ரிடி பிறக்கிறார். மிகப்பெரிய இஸ்லாம் மதத்தை தழுவிய குடும்ப பின்னணியில் பிறந்தாலும், மதத்தை விட விளையாட்டையே அதிகம் நேசிக்கிறார். பள்ளி பருவத்தில் பள்ளிக்கு போகாமல் கிரிக்கெட் விளையாட செல்கிறார்.

 

தொடர்ந்து எதிரணி வீரர்களை தனது பவுலிங்கால் திணற வைக்கிறார். அதுவும் இவர் ஆறாம் வகுப்பு படிக்கும் போது, அவருடன் விளையாடிய அனைவரும் 11,12-ஆம் வகுப்பு மாணவர்கள். ஒரு முறை உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட இந்த சிறுவனையும் வாய்ப்பு வந்தது.

 

அது தான் அவனது திறமையை வெளிவர செய்த முதல் ஆட்டம். அனைவரும் சற்றே பெரிய மாணவர்களாக இருந்தார்கள். ஆனால், ஷாகித் மட்டும் பால் முகம் மாறாத, அரும்பு மீசை மலராத குழந்தையாக இருக்கிறான். ஆனால், அந்த தொடரில் அனைவரையும் விட ஆச்சர்யப்படுத்துகிறான் ஷாகித்.

 

அன்று முதல் உள்ளூர் கிரிக்கெட்டின் செல்ல பிள்ளையாக மாறுகிறார். அணியில் உத்தி பிரிக்கும் போது ஷாகீத்தை எடுக்கவே அனைவரும் விரும்பினார். அதற்கு ஏற்றார் போல, அவனும் தனது திறமையை காட்ட தவறவில்லை.

 

அன்றைய காலக்கட்டத்தில்  ஷாஹித்துக்கு இம்ரான் கான், வாசிம் அக்ரம், வாக்கர் யூனிஸ், சையத் அன்வர் ஆகியோர் தான் மிகப்பெரிய ரோல் மாடல். அவர்களை போல் தானும் ஒரு வெற்றி வீரனாக வர துடித்து கொண்டிருந்தார்.

 

உள்ளூர் போட்டிகளில் கவனத்தை ஈர்த்த ஷாகித் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்க தொடங்குகிறார். சந்தர்ப்பம் எப்போ வேண்டுமானாலும், யாருடைய வாழ்க்கையையும் மாற்றி போடும் என்பதற்கேற்ப, ஷாஹித்துக்கும் அப்படி ஒரு சந்தர்ப்பம் அமைந்தது. அது யாரால் நிகழ்ந்தது என்பது தான் ஆச்சர்யம். யார் தன்னுடைய ரோல் மாடல் என நினைத்தாரோ அவரின் முலமாக தான் நடந்தது தான் ஆச்சர்யம்.

 

ஆம், வாசிம் அக்ரம் தன்னுடைய விருப்பமாக, ஷாகீத்தை வலை பயிற்சிக்கு வருமாறு அழைக்கிறார். மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறார். கண்ட நனவு நனவாகும் நாள் கொஞ்சம் கொஞ்சமாக கை கூடி வருகிறது என்பதில் உள்ளூர மகிழ்ச்சியடைந்தார்.

 

முதல் நாள் வலை பயிற்சியில் அதிக பந்துகளை வீசுகிறார். இவரது செயல்பாட்டை கூர்ந்து கவனிக்கிறார் வாசிம் அக்ரம். அன்றே கணித்தார், இவன், உலகம் வியக்கும் தரமான கிரிக்கெட்டராக வருவான் என.... பின்னாளில் காலம் அதையும் கனிய செய்தது என்பது வரலாற்று உண்மை.

 

சரி, அடுத்த நாள் வலை பயிற்சிக்கு வரும் போது, யதேச்சையாக வாசிம் அக்ரம் கேட்கிறார். உனக்கு பேட்டிங் செய்ய வருமா? பேட்டிங் செய்வியா என கேட்கிறார். தெரியவில்லை அண்ணா. ஆனால், முயற்சிக்கிறேன் என பேடை கட்டி கொண்டு வந்து நிற்கிறார்.

 

ஆறடி ஆஜானுபாகு வாசிம் அக்ரம். மின்னல் வேக பவுலிங்கில், அன்றைய முன்னணி பேட்ஸ்மேன்களையே கத்தி கலங்க வைப்பவர். அசால்ட்டாக போட்டு விக்கட் எடுப்பதில் கில்லாடி. அப்படிப்பட்ட வாசிம் அக்ரம், சிறுவன் ஷாஹித்துக்கு பவுலிங் செய்கிறார். யார் தன்னுடைய ரோல் மாடல் என நினைத்தாரோ, அவரே பவுலிங் போட்டால் எப்படி இருக்கும். இது கனவா? அல்லது நனவா? என உணர்ச்சி வெள்ளத்தில் மிதந்தார்.

 

முதல் பந்தயே அநியாயமாக தூக்கி அடிக்கிறார். அடுத்தடுத்த பந்துகளை வதம் செய்கிறார். வாசிமுக்கு உள்ளுக்குள் சற்று கடுப்பாக இருந்தாலும், ஷாகித்தின்மீது கொண்ட பற்றால், அவரை உற்சாகப்படுத்துகிறார்.

 

அடுத்த நாள் வலைப்பயிற்சி ஆரம்பமாகிறது. மீண்டும் வாசிம் அக்ரம் பவுலிங் செய்ய, ஷாகித் பேட்டிங் செய்ய வருகிறார். புது பந்தில் திணறுவான் என நினைத்த வாசிமுக்கு, மீண்டும் ஆச்சர்யம். போட்ட அனைத்து பந்துகளையும் ஒரு கை பார்க்கிறார்.

 

சரி, என்னுடைய பந்தை தான் அடித்து விட்டாய், கூப்பிடு வாக்கர் யூனிசை... வாக்காரும் பவுலிங் செய்கிறார். அவருடைய பந்துகளையும் சூர சம்ஹாரம் செய்கிறார்.

 

அப்போது வாசிம் அக்ரம் தன்னுடைய சகாக்களிடம் சொல்கிறார். ஷாகீத்தை தேவைப்பட்டால் 3-வது இடத்தில் தாராளமாக களமிறக்கலாம். அந்தளவுக்கு அவனிடம் திறமை இருக்கிறது என சொல்கிறார். மற்றவர்களும் இதை புரிந்து கொள்கிறார்கள்.

 

1996-ஆம் ஆண்டு சமீர் கோப்பையில், சுழற் பந்து வீச்சாளர் Mushtaq Ahmad காயமடைகிறார். அந்த வாய்ப்பு ஷாஹித்துக்கு ஏக மனதாக வருகிறது.  பிறகு அதே ஆண்டு க்டொபரில் கென்யாவிற்கு எதிராக, தன்னுடைய முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் களமிறங்குகிறார்.

 

அந்த போட்டியில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை, விக்கட்டும் எடுக்கவில்லை. சற்றே ஏமாற்றம் அடைகிறார். முதல் தர கிரிக்கட்டில் முத்திரை படைத்த ஷாகித்தால், தன்னுடைய முதல் சர்வதேச போட்டியில் சாதிக்க முடியவில்லை என்பது அவரின் துரதிருஷ்டம் தான்.

 

அடுத்த போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக களமிறங்குகிறார். முதல் 2 பாகிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, வலைபயிச்சியில் பேசிய வண்ணம் இம்முறை ஷாகித் 3வது வீரராக களமிறங்க அனுப்ப படுகிறார்.

 

அந்த நாள் ஷாகித்தின் நாள். எத்தனை கடுமையான பயிற்சிகளையும், முயற்சிகளையும் தன்வசப்படுத்தி ஆட தொடங்குகிறார். ஆட்டத்தில் முதல் பந்தில் இருந்தே எதிரணி பவுலர்களை திக்குமுக்காட வைக்கிறார். களமிறங்கிய அரை மணி நேரத்தில் உலகம் முழுவதும் தனது பேரை உச்சரிக்க வைக்கிறார்.

 

அப்படி என்ன செய்தார் அந்த அரை மணி நேரத்தில்.... 37 பந்துகளில் தன்னுடைய கன்னி சதத்தை பதிவு செய்கிறார். யாரிந்த சிறுவன் என உலகமே வியக்கிறது. 11 சிக்ஸர்களை பறக்க விட்ட ஷாகித், குறைந்த பந்துகளில் சதம் அடித்த உலகின் முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெறுகிறார். அந்த போட்டியில் இருந்து, ஷாகித்தின் மீதான எதிர்பார்ப்பு ஓவ்வொரு போட்டியிலும் எகிறுகிறது.

இப்படியாக களத்தில் தனது திறமையை நிரூபித்த ஷாகித்தின் கிரிக்கெட் வாழ்க்கையில் சில ஏற்ற இறக்கங்களை வராமல் இல்லை. அதுவும் வந்தது. அதையும் தாண்டி சாதித்த ஷாகித், இன்று நாடு கடந்து, மொழி கடந்து, இனம் கடந்து, கோடிக்கணக்கான உலக கிரிக்கெட் ரசிகர்களை தன் வசப்படுத்தியமைக்கு அவரின் மனிதாபிமானமும் ஒரு காரணம்.

 

அதற்கு ஒரு உதாரணம், கிரிக்கெட்டில் தான் சம்பாத்தித்த பணத்தின் ஒரு பகுதியை, பாகிஸ்தானில் ஒரு மருத்துவமனை கட்டி, ஏழை எளிய மக்கள் பயனடையும் படி செய்து வருகிறார் என்பது கொசுறு தகவல்.

 

பாகிஸ்தான் என்ற பேர் சொன்னால், நமக்கு கோவம் வரும். ஆனால், ஷாகீத் அப்ரிடி என்று சொன்னால் நமக்கு சந்தோசம் வரும். நாடு கடந்து மக்களின் மனத்தை வென்ற ஷாகீத் அபிரிடிக்கு இனிய 46th பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

சென்று வாருங்கள் எஸ்.பி.ஜனநாதன்!!!

💁 யார் இந்த இயக்குனர் எஸ் பி ஜனநாதன்? பண்பாட்டிற்கும், கலாசாரத்திற்கும் பெயர் பெற்ற, நெற்களஞ்சியம் இருக்கும் புகழ்பெற்ற தஞ்சாவூர் மாவட்டத்த...