👉"ஜெ.ஜெயலலிதா எனும் நான்" - பிப்ரவரி 24-2021
ஒருமுறை கர்ம வீரர் காமராஜர் தன்னுடைய நெருங்கிய நண்பர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போது இப்படியாக சொன்னாராம். "அத்தியாயங்கள் என்பது எழுதப்படுவதல்ல. சந்தர்ப்பத்தால் உருவாக்கப்படுவது" - என்று....
ஒருவேளை இதை உறுதியாக கோமளவல்லி நம்பினாரா? அல்லது இந்த வார்த்தைகளை உள் வாங்கி கொண்டாரா? என்பது தான் ஆயிரம் டாலர் கேள்வி.
ஆம், வெள்ளித் திரையிலும், அரசியல் துறையிலும் பின்னாளில் தனக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை அணு அணுவாக உருவாக்க ஆரம்பித்தார். அந்த அத்தியாயங்கள் தான் "ஜெ.ஜெயலலிதா எனும் நான்" என கர்வம் பொங்க சொல்ல வைத்தது போலும்.
அரசியலை தாண்டி, அவரது ஆளுமைகளை ரசித்தவர்கள் ஏராளம் பேர். அது தான், அவரது இறப்பிற்கு எதிர் கட்சி தலைவர்களையும் கொண்டு வந்து சேர்த்தது. அப்படிப்பட்ட ஒரு பெண் தலைவரான முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினம் பிப்ரவரி 24.
‘ஜெயலலிதா’ என்று எல்லோராலும் அழைக்கப்படும் அவரின் இயற்பெயர் கோமலவள்ளி. இவர் ஜெயராம் மற்றும் வேதவள்ளி தம்பதியருக்கு மகளாக மைசூர் என்ற இடத்தில் பிறந்தார். அவரது குடும்பம் அரச மைசூர் வம்சாவழியை சார்ந்தது.
மைசூர் நீதிமன்றத்தில் அரச மருத்துவராக பணியாற்றிய அவருடைய தாத்தா, மைசூர் மன்னர் ஜெயசாமராஜெந்திரா உடையார் அவர்களின் சமூக இணைப்பைப் பிரதிபலிப்பதன் காரணமாக தனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் முன்னொட்டாக ‘ஜெயா’ என்ற சொல்லை வழக்கமாக சேர்த்தார்.
ஜெயலலிதா அவர்கள் தனது இரண்டு வயதிலேயே தன் தந்தையை இழந்தார். அதன் பிறகு, அவரின் அம்மா மற்றும் தாய்வழி தாத்தா-பாட்டி வாழ்ந்த பெங்களூருக்குச் சென்றார். பெங்களூரில் தங்கியிருந்த அந்த குறுகிய காலத்தில், அவர் சில ஆண்டுகள் ‘பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில்’ கல்வி பயின்றார். வெள்ளித் திரையில் அவரது தாயாருக்கு நடிக்க வாய்ப்புக் கிடைத்ததால், அவர் சென்னை சென்றார்.
சென்னையிலுள்ள ‘சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில்’ தனது கல்வியைத் தொடர்ந்த இவர், பின்னர் ‘ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில்’ தனது பட்டப்படிப்பை முடித்தார். தனது குழந்தை பருவத்திலிருந்தே, கல்வியில் சிறந்து விளங்கய ஜெயலலிதா அவர்கள், சட்டம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டார்.
ஆனால், விதி அவருக்கென்று வேறு திட்டங்கள் வைத்திருந்தது. குடும்ப நிதி கட்டுப்பாட்டின் காரணமாக, அவரது தாயார் அவரை திரையுலகில் நடிக்க வலியுறுத்தினார். 15 வயதில், அவர் ஒரு முன்னணி கதாநாயகனுடன் அறிமுகமானார். அதுவே அவருடைய புகழ்பெற்ற திரைப்பட தொழிலுக்கு ஆரம்பமாக இருந்தது.
“வெண்ணிற ஆடை” என்ற படம் மூலமாக தமிழ் திரையுலகில் அவரது நடிப்பைத் தொடங்கினார். அதன் பிறகு, அவர் தெலுங்கு சினிமாவில் தலை காட்ட தொடங்கினார். பின்னாளில் திரைத்துறையில் தனக்கென தனி முத்திரை பதித்தார் அம்மு.
அம்மு, எப்படி அம்மாவாக மாறினார் என்பது உலகமே அறியும். கரடுமுரடான அரசியல் வாழ்க்கையையும் மற்றவர்களுக்கும், தனக்கும் இருக்கும் வித்தியாசத்தை உணர வைத்தார். அரசியல் ஏந்த அளவு வெற்றிகளை பெற்றாரோ, அதற்கு நிகராக சவால்களையும் சந்தித்தார்.எது எப்படி இருந்தாலும், செல்வி.ஜெயலலிதா அவர்களிடம் கற்றுக் கொள்ளவும், போற்றுக் கொள்ளவும் அதிகம் இருக்கிறது என்பதே நிதர்சனமான நிஜம்.
அம்மையார் இல்லாமல் போனால் என்ன? பல மனங்களில் இன்னும் வாழும், என்றும் வாழும் அவர்களுக்கு 74 வது பிறந்த நாள் வாழ்த்துக்களை பறைசாற்றுகிறேன்.




