பிப்ரவரி 18-2021-வியாழகிழமை, மாசி மாதம் 7-ந்தேதி!
💁 வரலாற்றில் இன்று!!!
👉 1930-ஆம் ஆண்டு புளூட்டோவை, அறிஞர் கிளைட் டோம்பா கண்டுபிடித்த தினம் இன்று!
சரி, இதற்கு ஒரு சீரிய வரலாறு உள்ளது. நாம் வாழும் இந்த பூமியையும் சேர்த்து பல்வேறு கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. இந்த வரிசையில் சூரியனுக்குப் பக்கத்தில் சுற்றி வரும் முதல் கோள் புதன். 3-வதாக நாம் வாழும் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது.
இதேபோல 8-வது கோளாக சுற்றி வரும் நெப்டியூனுக்கு அடுத்ததாக புதிய கோள் ஒன்று 1930-ம் ஆண்டு இதே நாளில், அமெரிக்க வானியல் அறிஞரான கிளைட் டோம்பா-வால் கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்த தகவல் வெளியானதும், புதிய கோளுக்கு பலரும் பெயர் சூட்ட முன்வந்தார்கள். இங்கிலாந்தை சேர்ந்த வெனிடியா என்ற 11 வயது சிறுமி, கிரேக்க பாதாள உலக கடவுளின் ரோமானிய பெயரான ‘புளூட்டோ’என்ற பெயரை தனது தாத்தா மூலமாக பரிந்துரை செய்தாள். அப்படித்தான் 9-வது கோளுக்கு ‘புளூட்டோ’என்ற பெயர் வந்தது.
ஆனால், 2006-ம் ஆண்டு ஆகஸ்ட் 24 அன்று கூடிய வானியல் அறிஞர்கள், சூரிய மண்டலத்தின் 9-வது கோளாக இருந்த புளூட்டோவை ‘குறுங்கோள்’ அல்லது ’குள்ளக்கோள்’ என்று சொல்லி தகுதி இறக்கம் செய்துவிட்டார்கள்.
👉 1957 - பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடான நியூசிலாந்தில் மரண தண்டனை கடைசி முறையாக நிறைவேற்றப் பட்ட தினம் இன்று. நியூசி என்றவுடன், பிரதமர் ஜெசிக்கா ஆண்டர்சன், கிவி பறவை, கிரிக்கட் வீரர் பிரண்டன் மெக்குல்லம் ஆகியோர் மட்டுமே நினைவுக்கு வரவேண்டாம். அங்கு மரண தண்டனை இல்லை என்பதும் இனி நினைவில் கொள்ளுங்கள்.
👉 1959 - நேபாளத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
👉 1992 - கும்பகோணம் கும்பேசுவரர் கோயிலில் மகாமக குளத்தில் இடம்பெற்ற நிகழ்வில் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா கலந்துகொண்ட போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 60 பேர் வரை உயிரிழந்தனர்.
👉 2014 - இராஜிவ் காந்தி கொலை வழக்கு: முன்னாள் இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது.
💁 இந்த நாளில் பிறந்து, இந்த நாளுக்கு சிறப்பு சேர்த்தவர்கள்!!!
👉1836 – இராமகிருஷ்ணர், இந்திய ஆன்மிகத் தலைவர்
சீடரான விவேகானந்தரே பெரும் ஞானியாய் இருக்கும் போது, அவரின் குருவான ராமகிருஷ்ணர் எப்படி இருந்திருப்பார். ஆம், அனைத்து மதங்களும் போதிப்பது, ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே... என்பதை தன் அனுபவங்கள் மூலம் உணர்ந்து, அதையே வலியுறுத்தியவர் தான் இராமகிருஷ்ணர். அவரின் பிறந்த தினம் இன்று.
அவரின் பல பொன்மொழிகளில் என்னை ஈர்த்தவை....
"ஒரு கெட்ட பழக்கத்தைவிட வேண்டும் என்றால், ஒரு நல்ல பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு தீவிரமான முயற்சி தேவை"
👉 1860 - மா. சிங்காரவேலர் - விடுதலைப் போராட்ட வீரர்
தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட், இந்தியாவில் முதன்முதலில் மே தினத்தைக் கொண்டாடியவர், இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் மாநாட்டுக்குத் தலைமை தாங்கியவர் எனப் பல பெருமைகளை ஒருங்கே பெற்ற பொதுவுடைமைவாதி தோழர் மா.சிங்கரவேலர் பிறந்த தினம் இன்று.
அவரின் பல சொற்பொழிவுகளில் என்னை ஈர்த்தவை....
தனது கடைசி மாநாட்டில் இவ்வாறாக உரையாற்றுகிறார். "இந்த மாநாட்டில் உங்கள் முன் நின்று கொண்டு உரையாற்றும் போது எனக்கு வயது 84. தொழிலாளி வர்க்கத்திற்காக குரல் கொடுக்க வந்துள்ளேன். இந்த மேடையிலேயே நான் இறந்து போனால், இதை விட பெருமை எனக்கில்லை" என்று பேசி அரங்கை திரு வைத்தவர்.
இவர்கள் போக, இந்த நாளில் யாரெல்லாம் பிறந்துள்ளீர்களோ, உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!