💁 ரஜினியின் முதல் வானொலிப் பேட்டி ஒளிபரப்பானதா???
சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள், தமிழ் சினிமாவில் உச்சத்தை தொட்ட போது வெளியான ஒரு திரைப்படம்தான் தீ. இப்படம் யாஷ் சோப்ரா இயக்கிய, சலீம்-ஜாவேத் எழுதிய 1975-ஆம் ஆண்டு வெளியான, கிளாசிக் இந்தி திரைப்படமான தீவாரின் ரீமேக் ஆகும்.
இந்தி திரைப்படத்தில் மெகாஸ்டார்களான அமிதாப் பச்சன், சஷி கபூர், நிருபா ராய், பர்வீன் பாபி மற்றும் நீது சிங் ஆகியோர் நடித்துள்ளனர். இதையொட்டி, "தீவார்" திரைப்படம், தீவர் குண்டர்கள் ஹாஜி மஸ்தானின் வாழ்க்கையை ஈர்த்து எடுக்கப்பட்டது.
ராஜா மற்றும் ரவி ஆகிய இரு சகோதரர்களின் கதையை இந்த திரைப்படம் சொல்கிறது. இரண்டு பாதைகளை தேர்ந்தெடுத்துக் கொண்ட இரண்டு சகோதரர்கள் கதாபாத்திரத்தில் ஒருவராக, ரஜினி கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். ரஜினியின் திருமணத்திற்கு சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு அதாவது ஜனவரி 26-ஆம் தேதி 1983 இத்திரைப்படம் வெளியிடப்பட்டது.
சரியாக ஒரு மாதம் கழித்து பிப்ரவரி 26-ஆம் தேதி, அதாவது இதே நாளில் (26-02-1984) ரஜினி லதா அவர்களை திருமணம் செய்கிறார்.
முன்னதாக "தீ" திரைப்படத்தின் சில காட்சிகள் இலங்கையில் படமாக்கப்பட்டது. அப்போது இலங்கை வானொலியில் இருந்து, அறிவிப்பாளர் BH.அப்துல் ஹமீது அவர்கள், ரஜினியை பேட்டி எடுக்க அவரை கலையகத்திற்கு(Studio) அழைத்து வருகிறார்.
அவரிடம் கேள்விகளை அறிவிப்பாளர் கேட்கிறார். ஒவ்வொரு கேள்விக்கும் சிறிது நேரம் யோசித்துவிட்டு, “ஆம்” என்கிறார். சில கேள்விகளுக்கு தாடியை தடவி, மண்டையை சொறிந்து “இல்லை” என பதில் அளிக்கிறார். சில கேள்விகளுக்கு “நீங்கள் சொல்வது போல் இருக்கலாம்” என்கிறார். தொடர்ந்து அறிவிப்பாளர் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் அப்படியே பதில் சொல்லுகிறார்.
கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் எடுக்கப்பட்ட அந்த பேட்டி, ரஜினியின் முதல் பேட்டியாக அமைந்தது. ஆனால் அந்தப் பேட்டியில் குறிப்பிடும்படியான சுவாரஸ்யமான பதிவுகள் எதுவும் இல்லை என்பதாலும், ஒளிபரப்புவதற்கு அந்தப் பேட்டியில் போதுமான விஷயங்கள் கிட்டவில்லை என்பதாலும், அந்தப் பேட்டியை இன்றளவும் இலங்கை வானொலி ஒளிபரப்பவில்லை.
இந்த தகவலை சில ஆண்டுகளுக்கு முன்பு, அவரை பேட்டி கண்ட அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத், அவராகவே ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருந்தார்.
பின்னாளில், பல தனியார் வானொலிக்கும், தொலைக்காட்சிக்கும் பத்திரிகைகளுக்கும் பக்கம் பக்கமாக பேட்டி கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் முதல் பேட்டி, இன்றளவும் ஒளிபரப்பாகவில்லை என்பது சற்று வேடிக்கையான வினோதம் தான்.
இதில் நாம் சில விஷியங்களை புரிந்து கொள்ள வேண்டும். இங்கே இருக்கும் 2 முன்னணி (ரஜினி, கமல்) நடிகர்களில் ஒருவர், பேசியே குழப்புகிறார் எனவும், இன்னொருவர் பேசாமலே மழுப்புகிறார் எனவும் ஒரு பரவலான கருத்து இருக்கிறது. அதில், ரஜினிகாந்த், இன்று, நேற்று, யோசித்து பதில் சொல்லவில்லை. அவர் 1980-களின் காலம் தொட்டே யோசித்து யோசித்து தான் பதில் சொல்லி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருக்கட்டும். ஆனால், பல பேட்டிகள் ஒளிபரப்பாகும் வானொலிகளின் சார்பில், ரஜினி மற்றும் லதா ரஜினி அவர்களுக்கு மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துக்கள்.



No comments:
Post a Comment