💁 வித்தைகள் புத்திரர் "வித்யாசாகர்"
மெலடி பாடல்களை அடுத்தடுத்து, அடுக்கடுக்காக கொடுத்து, தமிழ் சினிமா ரசிகர்களை இசையால் தாலாட்ட வைத்தவர் தான் இந்த இசைய -மைப்பாளர் வித்யாசாகர். மார்ச்சு 2, 2021, அவரின் பிறந்த தினம் இன்று.
“கர்ணா” படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் நம்மை தாலாட்டும் வகையில் இருக்கும். பல நாள் இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் தான் இசையமைத்துள்ளார் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், தோழி ஒருவர் சொல்லி தான் இந்த படத்தின் இசையமைப்பாளர் வித்யாசாகர் என்று தெரிந்து கொண்டேன்... இல்லை இல்லை, தெளிந்து கொண்டேன்.இப்படி பல பாடல்களுக்கு இவர் தான் இசையமைத்துள்ளார் என்று தெரியாமலே, நாமும் கேட்டு விட்டு கடந்து போகிறோம். அந்த வகையில் இசை ரசிகர்களை தனது மெலடியால் தாலாட்ட வைத்த இந்த வித்யாசாகர் குறித்து தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள விஜயநகரம் பகுதியில் பிறந்திருந்தாலும், இசைக்கு மொழி தெரியாது. அது ரசிப்பவர்களை பொறுத்தது என்பதற்கேற்ப, தமிழில் வந்து கால் பதிக்கிறார் வித்யாசாகர். ஆம், 1989-ஆம் ஆண்டு "பூமணம்" படத்தின் மூலமாக அறிமுகமானார்.
பிறகு, 1995-ஆம் ஆண்டில் ஜெய்ஹிந்த், கர்ணா, மிஸ்டர் மெட்ராஸ், முறை மாமன், பசும்பொன், போன்ற படங்களில் பணியாற்றி, படங்களுக்கு வலு சேர்த்து, அதன் வெற்றியில் தனது பங்களிப்பை காட்டினார்.
பல பாடல்களை மெலடியாக கொடுத்திருந்தாலும், சில பரீட்சார்த்த முயற்சிகளை செய்வதில் கை தேர்ந்தவர் வித்தியாசகர். உதாரணத்திற்கு, வேறு மாதிரியான பாடல்களை பாடி வந்த கமல்ஹாசனை அழைத்து வந்து, "அன்பே சிவம்' படத்தில், "யார் யார் சிவம்" என பாட வைத்தார்.
இன்னொரு உதாரணத்திற்கு, "போறாளே பொன்னுத்தாயி" என்ற மனதை பிசையும் பாடலை பாடியிருந்த ஸ்வர்ணலதாவையும், நாட்டுப்புற பாடல்களை மட்டுமே பெரிதும் பாடி வந்த புஷபவாம் குப்புசாமியையையும் இணைத்து, வேறு மாதிரியான வடிவத்தில் ஒரு Western Folke பாடலை பாட வைக்கிறார். அது தான் “எதிரும் புதிரும்” படத்தில் இடம் பெற்ற "தொட்டு தொட்டு பேசும் சுல்தானா' என்ற பாடல்.
பாடல்களில் வித்தியாசத்தை காட்டும் இந்த வித்தகனுக்கு இன்னொரு உதாரணத்தை கூட சொல்ல முடியும். 2001-ஆம் ஆண்டில் தில், அள்ளித்தந்த வானம், வேதம், தவசி, பூவெல்லாம் உன் வாசம், இப்படி 5 தமிழ் படங்களுக்கு இசையமைத்தார். இதில் தில், தவசி, பூவெல்லாம் உன் வாசம் ஆகிய மூன்று படங்களும் இவருக்கு, சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு விருதை பெற்று தந்தது.
இப்படி பாடல்கள் மட்டுமல்லாது இயக்குனர்களின் இசையமைப்பாளராகவும் இருந்து இருக்கிறார். கமர்ஷியல் படங்களில் கவனம் செலுத்தி வந்த இயக்குனர் சுந்தர் சி, வேறு மாதிரியான ஒரு படத்தை இயக்குகிறார். அது தான் “அன்பே சிவம்”. அதிலும் தன்னுடைய இசையாலும், பின்னணி இசையாலும் படத்திற்கு வலு சேர்க்கிறார்.
நாணல் புல்லுக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. என்ன தான் நதியோடும் திசையில் வளைந்து நெளிந்து அசைந்தாலும், நதி போகும் வேகத்தில் தன்னுடைய இருப்பை மாற்றிக்கொள்ளாது. நதியோடும் திசைக்கு மாற்றிக் கொள்ளுமே தவிர, தன்னுடைய இடம் பெயர்வை மாற்றிக்கொள்ளாது.
அப்படி தான் வித்தியாசகரும்.... ராதாமோகன் கரு.பழனியப்பன் என இயக்குனர்களுக்கு ஏற்ப தன்னுடைய இசையை விஸ்தாரப்படுத்திக் கொண்டார். தவிர, எப்போதும் மெல்லிசையை விட்டுக் கொடுக்காமல், படத்திற்கு ஒரு மெல்லிசையை வைக்க தவறியதில்லை.
இவருக்கும் இசை ஞானி இளையராஜாவுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. நெறைய பாடல்களில் சைலன்ஸை உணர வைத்து, ஸ்லோ பாய்சன் மாதிரி, வேகத்தை கூட்டுவார்கள். அது இசையை ரசிக்கும் ரசிகர்களுக்கு வேறு மாதிரியான போதையை ஏற்றும்.
அதற்கும் ஒரு உதாரணம் சொல்லுவேன். “மலரே மவுனமா” பாடல். இன்னொரு முறை இந்தப் பாடலை சற்றே உன்னிப்பாக கேளுங்கள். அதிக இடங்களில் சைலன்ஸ பயன்படுத்தி இருப்பார். இதுவும் இசை போதையை ரசிகனுக்கு ஏற்றும் ஒரு வகை யுக்தி தான்.
ஆக, எதற்கு வந்தாரோ, அந்த வேலையை மிக சரியாக பார்த்து இருக்கிறார் வித்தியாசாகர். உலகம் இருக்கும் வரை வித்தியாசாகரின் மெலடிகள், ரசிகர்கள் மனதில் நிழலாடிக் கொண்டே இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி அவர்களின் வழித்தோன்றலாய் வந்து, இசையால் வாழ்ந்து வரும் வித்தியாசாகருக்கு, நெஞ்சம் அள்ளி கொஞ்சும், பிச்சு பூ சொற்களால், உச்சி முகர்ந்து, விஞ்சு முகம் கொண்ட அஞ்சுக தமிழால், பிறந்த நாள் வாழ்த்துக்களை காணிக்கையாக்குகிறேன். வாழ்க, நலமுடன், தேக ஆரோக்கியத்துடன்....


No comments:
Post a Comment