Wednesday, March 3, 2021

மார்ச்சு 2008 - டென்மார்க் ஏன் மகிழ்ச்சியான நாடு?

💁 அக்மார்க் கெத்து காட்டும் - டென்மார்க்.

"டென்மார்க்" உலகின் மகிழ்ச்சியான நாடாக 2007-2008 ஆண்டு அறிவிக்கப்பட்ட மாதம் மார்ச்....இந்த பட்டியலில் டென்மார்க் இடம் பிடித்து, இந்த மார்ச் மாதத்துடன் 144 மாதங்களை கடந்தாலும், ஒவ்வொரு வருடமும் முதல் 5 இடங்களுக்குள் தங்களை நிலை நிறுத்திக் கொள்வதே இந்நாட்டின் தனிச்சிறப்பு.   

 

2008 ஆம் ஆண்டு, உலகில் மகிழ்ச்சியாக வாழும் நாடுகளின் பட்டியலில் டென்மார்க்கை அறிவித்தவுடன், அனைவரும் டென்மார்க் நாட்டை கூகுள் பண்ண ஆரம்பித்து விட்டனர். அடுத்த நாளே அதிகம் தேடப்பட்ட நாடுகளில் மீண்டும் டென்மார்க் பெயர் அடிபடுகிறது. அப்படி என்ன தான் இந்த டென்மார்க் நாட்டில் இருக்கிறது

 

அப்படி என்றால் அந்த நாட்டில் வாழும் மக்களுக்கு கவலை என்றால் என்னவென்றே தெரியாதா? உலக நாடுகள் இந்த ஒரு குட்டி நாட்டை உற்று நோக்க காரணம் என்ன? இருக்கிறது பல காரணம். 

(பிரதான காரணத்தை இந்த கட்டுரையின் பிற்பகுதியில் குறிப்பிட்டுள்ளேன். அதற்காக கடைசி பகுதிக்கு போக வேண்டாம். சுவாரஸ்யம் இருக்காது. பொறுமையாக போங்க)

முதலில் டென்மார்க் நாடு எங்கு இருக்கிறது என்று பார்த்தால், வடக்கு ஐரோப்பாவின் தென்பகுதியில் “Nordic Countries” எனப்படும் வட துருவ நாடுகளின் தென் பகுதி நாடு தான் இந்த டென்மார்க். ஸ்வீடனுக்கு தென் மேற்கிலும், நார்வேயின் தென் பகுதியிலும் ஜெர்மனியின் வடக்கு பகுதியிலும் அமைந்துள்ளது. 


இந்தியாவிற்கு எப்படி மூன்று பக்கம் கடல்கள் இருக்கிறதோ, அப்படி இந்த டென்மார்க் நாட்டிற்கு 2 பக்கமும் கடல் சூழ்ந்துள்ளது. அதாவது அட்லாண்டிக் மற்றும் பாஸ்டிக் கடலால் சூழப்பட்டுள்ளது.

 

இது ஐரோப்பாக் கண்டத்திலுள்ள நாடுகளுள் ஒன்று. சில மாதங்களுக்கு முன்பு, பருவ நிலை மாற்றம் குறித்த மாநாடு நடந்த இடமான, கோபன் ஹேகன் தான் இந்த நாட்டின் தலைநகரம். இதுவும் இந்தியாவை போன்று தீபகற்ப நாடு தான்.

 

என்னுடைய நண்பர் ராபர்ட் சில ஆண்டுகளுக்கு முன்பு டென்மார்க் சென்று வந்தார். சில ஆச்சர்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். நாங்கள் திருவண்ணாமலையில் 10 வருடங்கள் படிக்கும் போது, டென்மார்க் நாட்டில் இருந்து, செல்வி.க்ரோ அம்மையார் அவர்களும், செல்வி.ஜேன் கார்ட்டர் ஆகிய இருவரும் இங்கு தங்கி சேவையாற்றினார்கள். 


பிறகு வயோதிகம் காரணமாக அந்த நாட்டிற்கு அழைத்து கொள்ளப்பட்டார்கள். பல ஆண்டுகளுக்கு பிறகு, டென்மார்க் சென்று நேரில் சந்தித்த அந்த புகைப்படம் தான் இது. அவர் பகிர்ந்து கொண்ட விஷியங்களில் சில இதோ....

டென்மார்க் நாட்டின் மொத்த மக்கள் தொகையே வெறும் 58 லட்சம் பேர் தான். இன்னும் தெளிவாக சொல்லப் போனால், நம் இந்தியாவின் புதுச்சேரி மாநிலத்தை விட, 4 மடங்கு பெரிது. அவ்வளவு தான். மக்கள் தொகை குறைவாக இருந்தாலே, மக்களுக்கு தேவையானதை நிறைவாய் கொடுத்து வி முடியும் அல்லவா? ஆம்.


இன்னொரு ஆச்சர்யமான விஷயம். நம் இந்தியாவிலும், பிற நாடுகளிலும் வாரத்தின் 6 நாட்களும் உழைக்கிறோம். மணிக்கணக்கில் வேலை பார்க்கிறோம். ஆனால், டென்மார்க்-ல் ஒரு வாரத்திற்கான வேலை நேரமே சராசரியாக வெறும் 37 மணி நேரம் தான்... அந்த நேரத்தை பிரித்து பிரித்து, ஆரோக்கியமாக வேலை பார்க்கிறார்கள்.

 

நம்மை போல், ஒரு கிலோ மீட்டருக்கு என்றாலும் பைக்கை எடுப்பது போல் அவர்கள் எடுப்பது இல்லை. நடப்பதும் இல்லை. அங்குள்ள பெரும்பாலோனோர் சைக்கிள் காதலர்களாக இருக்கிறார்கள். காலை 7 மணிக்கே அலுவலகத்திற்கு சைக்கிளில் கிளம்பி, மலை 4 மணிக்கு முன்பாகவே வேலையை முடித்து வீட்டிற்கு வந்து சேர்ந்து விடுகிறார்கள்.

இந்தப் பழக்கத்தை அவர்களின் மூதாதையர்கள், பறவைகளிடம் இருந்து கற்றுக் கொண்டதாக எழுதப்படாத வரலாறும் உள்ளது. ஆம், காலையில் பொழுது விடிந்த உடன் பறவைகள் கூட்டை விட்டு வெளியே செல்லும். மாலை இருட்டும் முன்பே தங்களது கூடுகளுக்கு வந்து சேர்ந்து விடும். இதைத் தான் இவர்களும் செய்கின்றனர்.

 

சைக்கிளை எப்படி நேசிக்கிறார்களோ, அதே போன்று இங்குள்ள பெரும் பாலோனோர் சொந்தமாக  பண்ணை வீடுகளும், இயற்கை சுற்றியிருக்கும் விவசாய வீடுகளும் வைத்துள்ளார்கள். வார இறுதி நாட்களில் அங்கு சென்று அமைதியாக, இயற்கையுடன் பின்னி பிணைந்து விடுகின்றனர். அந்த இயற்கையின் அழகும், மனத்தின் தெளிவும், அடுத்த ஒருவாரத்திற்கு அவர்களுக்கு தீனி போடுகிறது.

நம்மூர் போல, வண்டியை எடுத்த உடன் கரடு முரடான ரோட்டில் கூட 3 வினாடிகளில் மூன்றாவது கியர் போட்டு, 100-ல் தாறுமாறாக போகிற மாதிரி, இங்கு பயணிக்க முடியாது. 130 கி.மீ-க்கு மேல் டென்மார்க் சாலைகளில் பயணிக்க அனுமதியில்லை. மக்கள் அடர்த்தியும் குறைவு என்பதால், சாலைகளில் விபத்தும், விரல் விட்டு என்னும் அளவில் தான் இருக்கிறது.

 

ஒப்பீடுக்காக இதை சொல்லவில்லை. நம் இந்தியாவில் இருப்பது போல, தொட்டத்துக்குலாம் அங்கே வரி கிடையாது. மிகவும் சொற்பமான வரிகள் தான். அதனால் தான் அவர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்கின்றனர். அரசு அறிவிக்கும் திட்டங்களை உடும்பு பிடியாய் பிடித்து கொள்கின்றனர்.


அதிக வயது கொண்டோரை அந்த நாட்டு அரசு, பிற நாடுகளுக்கு விமானத்தில் அனுப்ப அனுமதி அளிக்காது. இந்த விஷயத்தில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். காரணம் எங்கள் நாட்டின் மக்கள் எங்களின் சொத்து. அவர்களுக்கு ஒரு கஷ்டம் வெளி நாடுகளில் வந்து விட்டால், அவர்களை இங்கே மீட்டுக் கொண்டு வருவது எங்களுக்கு சிரமம். அந்த நல்லெண்ண அடிப்படியில் தான், அவர்களை விமானத்தில் பறக்க அனுமதிக்க தடை செய்கிறோம் என சொல்கிறார்கள்.

 

கார் வாங்க வேண்டுமென்றால் 180 சதவீதம் வரி செலுத்த வேண்டும். காரணம் குறைந்த அளவுக்கு கார் வாங்கும் சந்தர்ப்பத்தை அவர்களுக்கு கொடுத்து விட்டால், காற்றினால் புகை வரும். அதனால் நகரம் மாசுபடும் என்பதே அரசின் நல்லெண்ணம். மக்களும் இதை புரிந்து கொண்டுள்ளனர். ஆனாலும் வீட்டுக்கு வீடு கார் இருப்பதை பார்க்க முடியும். அதை எடுக்காமல், சைக்கிளை எடுக்க இதுவும் ஒரு காரணம்.


டென்மார்க்கின் பெரும்பாலான தொழில் பால் தொழில் தான். உலகிற்கு பால் உற்பத்தியை வழங்கும் நாடுகளில் இதுவும் ஒன்று. அதனாலோ என்னவோ, இங்குள்ள பெரும்பாலோனோர் சாக்லேட் பிரியர்களாகவும், கேக் பிரியர்களாகவும் இருக்கிறார்கள். சில இடங்களில் மதிய உணவில் கேக் வைத்து கொடுக்கும் முறையும் நடைமுறையில் இருக்கிறது.

சரி, நம்மூர் போல இங்கு ஆதரவற்றோர் இல்லம் இல்லையா என்ற கேள்வி எழலாம். கண்டிப்பாக இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஆனால் அங்குள்ளவர்களுக்கு தேவையான பொருட்களை முன்பே கொடுத்து விடுவார்கள். அவர்களுக்கு விருப்பம் போல அவர்களே சமைத்து கொள்ள வேண்டும். உணவின் மூலப்பொருட்களை வீணாக்க கூடாது என்பது அங்குள்ள விதி.

 

சரி, நான் பிரதானமாய் சொல்ல வந்த விஷயம் இது தான். டென்மார்க் நாட்டில் கல்வியும், மருத்துவமும் இலவசம். இரு துறைகளுக்கும் தனியார்மயம் இல்லை. இரண்டுமே பிற நாடுகளில் இருக்கும் தனியார்மயத்துக்கு இணையாக அரசு அதனை மேம்படுத்தி, தன் நாட்டு மக்களை, செட்டைகள் கீழே அடை காக்கும் கோழி குஞ்சுகளை போல பாதுகாத்து வருகிறது.

 

ஒரு தனி மனிதனுக்கு அடிப்படை கல்வியும், அடிபட்டு கீழே வீழும் போது  அனைத்து கொள்ள மருத்துவமனையும் இருந்தாலே போதும். மற்றவை எல்லாம் அவன் சம்பாதித்து கொள்ளலாம். இதை அரசு தான் கொடுக்க வேண்டும். அதை தான் டென்மார்க் நாடு தன் மக்களுக்கு வழங்கி வருகிறது.


அந்த நாட்டின் அரசும், கல்வி, மருத்துவம் மட்டுமல்லாது, காவல்துறை, பொதுப்பணித்துறை, தொழில் துறை என அனைத்து துறைகளிலும் அசத்தி வருகிறது. இப்படி இருந்தால் ஏன் ஒரு நாடு மகிழ்ச்சியான நாடாக இருக்காது? 


அய்யன் பெருவள்ளுவன்னின் இந்த திருக்குறள் டென்மார்க் நாட்டிற்கு சாலப்  பொருந்தும் என நினைக்கிறேன்.

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்

உடையான் அரசருள் ஏறு.

அதாவது, வீரம் மிக்க படை, நாட்டுப்பற்று மிக்க மக்கள், எடுக்கக் குறையாத செல்வம், நாட்டின் நலம் அறிந்து செயல்படும் அமைச்சர், துன்பத்தில் உதவும் அண்டை மாநில நட்பு, அழிக்கமுடியாத காவல் ஆறும் உடையதே அரசுகளில் சிங்கம் போன்றது. அக்மார்க் கெத்து காட்டும் டென்மார்க்.!!! சபாஷ்!!!

No comments:

Post a Comment

சென்று வாருங்கள் எஸ்.பி.ஜனநாதன்!!!

💁 யார் இந்த இயக்குனர் எஸ் பி ஜனநாதன்? பண்பாட்டிற்கும், கலாசாரத்திற்கும் பெயர் பெற்ற, நெற்களஞ்சியம் இருக்கும் புகழ்பெற்ற தஞ்சாவூர் மாவட்டத்த...